search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னரிடம் மனு"

    தமிழகத்தில் ஜனவரி முதல் நடந்துள்ள ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் மனு அளிப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். #Ramadoss #PMK
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரத்தில் தமிழக அரசின் ஊழலை எதிர்த்து பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் பா.ம.க. தான் ஆட்சிக்கு வரும் என பலர் எனக்கு போன் செய்து சொல்கிறார்கள். அன்புமணி கூட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். அண்ணாவை போல அன்புமணிக்கு அடுக்கு மொழி பேச தெரியாது. ஆனால் தமிழகத்தை பற்றி பல மணி நேரம் பேசுவார்.

    1967-ல் ஏற்பட்ட மாற்றம் மீண்டும் ஏற்பட போகிறது. 1967-க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இல்லை. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது ஊழல் தொடங்கியது. தற்போது எப்படி ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    தமிழகத்தில் அன்புமணி மாற்றத்தை கொண்டு வருவார் என மக்கள் நம்புகிறார்கள். மக்கள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். மக்கள் தங்களுடைய ஓட்டை விலைக்கு விற்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக கொடுக்கப்பட்ட நோட்டீஸ் குறித்து பேசிய டாக்டர் ராமதாஸ் “நீங்கள் எல்லாரும் ‘தினத்தந்தி’ பத்திரிகையை படிப்பீர்கள். அதில் படிக்க, படிக்க செய்திகள் இருக்கும். பக்கங்களும் அதிகமாக இருக்கும். அதே போல் இந்த நோட்டீஸ் உள்ளது” என்றார்.

    அதனை தொடர்ந்து கூட்டத்துக்கு பின்னர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    12 வருடத்தில் 7 ஆயிரம் விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர். இதைப்பற்றி தான் சிந்தனை செய்கிறோம். தமிழகத்தில் பினாமி ஆட்சி தான் நடக்கிறது.

    தமிழக அரசின் மீது 18 ஊழல் புகார்களை கவர்னரிடம் 2 முறை மனுவாக கொடுத்திருக்கிறோம். அதை அவர் வரிக்கு வரி படிக்கிறார். ஆனால் நடவடிக்கை இல்லை.

    இந்த ஜனவரி முதல் நடந்துள்ள ஊழல்களை பட்டியலிட்டு மீண்டும் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, நடிகர் ரஞ்சித், மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வக்கீல் சுரேஷ், மாவட்ட செயலாளர் விநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #Ramadoss #PMK

    ×